சேலம் மாவட்டம், சின்னக்கடை வீதி பகுதியில் பூ விற்பனைக் கடைகள், பூக்கள் கட்ட பயன்படுத்தப்படும் நூல் விற்பனைக் கடைகள் ஆகியவை அதிகளவில் இயங்கிவருகின்றன. இந்தப் பகுதியில் சரவணன் என்பவர் பூக்கள் கட்ட பயன்படுத்தப்படும் நூல்கள், நார்கள், அலங்காரப் பொருள்கள் விற்பனைக் கடையை கடந்த 20 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.
தற்போது கரோனா பாதிப்பு காரணமாக போதிய விற்பனை இல்லாத காரணத்தினால் மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஆடி 1ஆம் தேதியான இன்று கடையைத் திறந்து, சாமிப் படங்களுக்கு விளக்கு ஏற்றி வைத்துள்ளார்.
பின்னர் தனது மகளின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்ததை அறிந்து கடையை மூடி விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, விளக்கில் இருந்த தீ, அருகில் இருந்த நூல் கண்டு மீது பட்டு மளமளவென தீ பரவி கடை முழுவதும் எரியத் தொடங்கியது.
இதைக் கண்ட அருகிலிருந்த கடையின் உரிமையாளர்கள் இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்து தொடர்பாக சேலம் டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற ரவுடிகள்: நீதிமன்றத்தில் ஆஜர்