தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அம்மாவட்டத்தில் 389ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 27 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 243 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டாம்புளி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் கரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய் தடுப்பு, விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தகுந்த வழங்கப்படுவதை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் முதன்மை தொடர்பாளர்கள், இரண்டாம் தொடர்பாளர்கள் என எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கரோனா தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அனைத்து வீடுகளிலும் வழங்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில் அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.