திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற 60 மாணவர்கள் மூன்று பேருந்துகள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வேலூரில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத புறப்பட்டனர். மாணவர்கள் சென்ற தனியார் பேருந்துகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதியம் 2 மணிக்கு நடைபெறும் தேர்வை எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் கந்தசாமி பேருந்தில் நேரடியாகச் சென்று அறிவுரைகளை வழங்கினார். "உங்கள் அருகாமையில் இருக்கும் மாணவர்கள் உங்களுக்கு போட்டி அல்ல டெல்லி, பிகார் போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான் உங்களுக்கு போட்டியாளர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து தேர்வு எழுத வேண்டும்" என்றார்.
வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ள ராணிப்பேட்டை, மேல்விஷாரம், காட்பாடி ஆகிய மூன்று மையங்களில் தேர்வு எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இலவசப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தேர்வு முடிந்த பின்னர் மீண்டும் அவர்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்படுவர்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பெற்றோரும் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இரண்டும் பேருந்துகளும், போளூரில் இருந்து ஒரு பேருந்தும் திருவண்ணாமலை மாவட்ட நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.