திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனோ தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கரோனோவால் பாதிக்கப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியமிக்க இருட்டுக்கடையை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிசிங் என்பவர் இரண்டாம் தலைமுறையாக நடத்தி வந்தார்.
இந்நிலையில், அவர் கரோனோவால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தான் தங்கியிருந்த அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
கரோனோ பாதிப்பு காரணமாக ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த ஹரிசிங் தனது கடைக்கு வந்த பிற நபர்களுக்கு தொற்று பரவியிருக்குமோ என்று மனவருத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கரோனோவால் பாதிக்கப்பட்டதையடுத்து நெல்லை டவுனில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் இன்று மாநகராட்சி அலுவலர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே டவுன் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதேபோல் இதே பகுதியில் உள்ள பிரபல தனியார் நகைக்கடை ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
எனவே டவுன் பகுதியில் தொற்று பாதிப்பு அதிகரித்த காரணத்தால் இன்று முதல் 15 நாள்களுக்கு அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். டவுனுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் பேரிகார்டர் அமைத்து மூடப்பட்டுள்ளது.
அங்கே மாநகராட்சி ஊழியர்கள், கரோனோவால் பாதிக்கப்பட்ட பகுதி என்று எழுதப்பட்ட பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் டவுன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பூர் சீர்மிகு நகர் பணிகளை ஆய்வுசெய்த எம்.பி.