திருவாரூர் நகராட்சியில் 30-வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட நெய்விளக்கு தோப்பு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டுவது வழக்கம்.
சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகள் - பொதுமக்கள் புகார் - தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆடு மற்றும் கோழி, பன்றி கழிவுகள்
திருவாரூர்: சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றின் இறைச்சிக் கழிவுகளை முழுவதுமாக கொட்டிவிட்டு செல்கின்றனர். அதேபோல் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருந்து அட்டைகள் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் குப்பைகள் என அனைத்தும் இங்கு வந்து கொட்டப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் தொற்றுநோய் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் அங்கு வீசும் துர்நாற்றம் காரணமாக முகத்தை மூடிக்கொண்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையோரத்தில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும், அது மட்டுமில்லாமல் கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.