கன்னியாகுமரி மாவட்டம் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்த வேதமுத்து என்பவர் கோட்டார் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், “ நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். எனக்கு 75 வயதாகிறது. நான் வடசேரி பகுதியில் உள்ள முத்தூட் பின்கார்ப் நகை அடமான நிறுவனத்தில் பல முறை நகை அடகு வைத்து பணம் பெற்றுள்ளேன். இதன் மூலம் அந்த நிதி நிறுவனத்தில் மேலாளர் சீதா கிருஷ்ணன் எனக்கு நன்கு அறிமுகமானார்.
இந்நிலையில் கிளை மேலாளர் என்னை தொடர்புகொண்டு கடந்த ஜனவரி மாதத்தில் வங்கிக் கிளையில் மாத இலக்கு கணக்கு காட்டுவதற்கு குறைவாக இருப்பதாகவும், எனவே தங்களிடம் இருக்கும் நகையை அடகு வைத்து விட்டு மார்ச் மாதத்தில் திருப்பிக் கொள்ளலாம் அதற்கு 12% மட்டுமே வட்டி விதிப்போம் என்று கூறினார்.
முத்தூட் நிறுவனத்தின் மேலாளர் தெரிந்த நபர் என்பதால், நான் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைத்திருந்த நகைகளை திருப்பி கடந்த ஜனவரி மாதம் இருபதாம் தேதி 6 லட்சத்து 1,200 ரூபாய்க்கு முத்தூட் நிறுவனத்தில் அடகு வைத்தேன். அப்போது ரசீதில் 30 சதவீத வட்டி வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து நான் நிறுவனத்தின் மேலாளரிடம் கேட்டபோது அது நீண்ட நாள் திருப்பாமல் இருப்பவர்களுக்குதான் 30%, நீங்கள் மூன்று மாதத்தில் திருப்புவதால் 12% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும் கவலைப்பட வேண்டாம் என்று கூறி அனுப்பிவிட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நகைகளை திருப்புவதற்காக நிதி நிறுவனத்திற்கு சென்றபோது ஊரடங்கால் நிறுவனம் பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. அரசு அளித்த சில தளர்வுகளை தொடர்ந்து நிதி நிறுவனம் திறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நான் மே மாதம் 4ஆம் தேதி நிதி நிறுவனத்திற்கு எனது நகைகளை மீட்க சென்றேன். அப்போது எனது நகைகளுக்கு 30 சதவீதம் வட்டி விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு காலத்தில் வங்கிகள் தவணைத் தொகை வசூலிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது ஆனாலும் நீங்கள் முப்பது சதவீத வட்டி வசூலிக்கிறார்கள் என்று கேட்டேன்.
மேலும் 12% மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது 30% கேட்பதன் காரணம் என்ன என்று கேட்டதற்கு அவர் என்னை வாடிக்கையாளர்கள் முன்னிலையில் தகாத வார்த்தையால் பேசினார். மேலும், 30 சதவீதம் வட்டியுடன் நகையைத் திருப்ப முடிந்தால் திருப்புங்கள் இல்லை நிறுவனத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் தற்போது நான் பணம் கட்டாததால் நிதி நிறுவனம் சார்பில் எனது நகையை விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தபால் மற்றும் தொலைபேசியிலும் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே காவல் துறையினர் இதில் தலையிட்டு எனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.