திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகேயுள்ள முனுகபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் ( 21). சில நாள்களுக்கு முன், இவர் டிராக்டர் மூலம் மணல் கடத்தி வந்தபோது ஆரணி காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான காவலர்கள் இவரை பிடிக்க முயன்றனர்.
அப்போது, சந்திரன் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்கள் மீது டிராக்டர் ஏற்றி கொலை முயற்சி செய்தார். இதையடுத்து, சந்திரனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மணல் கடத்தியபோது காவலர்களை கொலை செய்ய முயற்சித்த சந்திரன், மேலும் தொடர் குற்றத்தில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கும் வகையில், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரைத்தார். இதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி சந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 73 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'சாலைய சீரமைங்க... இல்லனா ரேஷன் கார்ட நீங்களே வச்சிக்கோங்க'