கோவை கிராஸ்கட் சாலையில் இயங்கிவரும் ஜிஆர்டி நகைக்கடைக்கு, அக்கடையின் சென்னை கிளையில் இருந்து ஊழியர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தி உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் குமார் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள், கோவை மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் கிராஸ்கட் சாலையில் உள்ள ஜிஆர்டி நகைக்கடையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 18ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து உரிய அனுமதி பெறாமல் சாலை மார்க்கமாக கோவைக்கு அழைத்து வரப்பட்டது தெரியவந்தது. அவர்களைக் கோவையில் தங்க வைத்து கிராஸ்கட் சாலையில் உள்ள நகைக்கடையில் பணியில் ஈடுபடுத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் நகை கடை முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.
உரிய அனுமதி பெறாமல் சென்னையில் இருந்து ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியாகவும், அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அதிக அளவிலான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தியதற்காகவும் ஜிஆர்டி நகை கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
மேலும், சென்னையில் இருந்து கோவைக்கு இ-பாஸ் இல்லாமல் எப்படி வந்தார்கள் என்பது குறித்தும், போலி இ-பாஸ் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து கோவை வந்த பணியாளர்களுக்கு எடுக்கக்கூடிய பரிசோதனையில் யாருக்காவது தொற்று இருந்தால், கடந்த இரண்டு நாள்கள் கடைக்கு வந்து சென்ற பொதுமக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.