உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனையடுத்து, இன்றுமுதல் (ஜூன்24) ஜூன் 30ஆம் தேதிவரை மீண்டும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அரசின் உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகள், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், பரவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.