மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தலைவி' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படவுள்ள இந்த படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், கலைஞர் கருணாநிதியாக பிரகாஷ் ராஜூம் நடித்துள்ளார். மேலும், பல முக்கிய கதாபாத்திரங்களில் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார். வெளியீட்டுக்கு தயாராக காத்திருக்கும் இந்த படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட் பிளிக்ஸ் நிறுவனத்திடம், 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கசிந்த தகவலை படத்தின் கதாநாயகி கங்கனா ரனாவத் உறுதிப்படுத்தியுள்ளார்.