அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாழக்குறிச்சி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கருப்பசாமி, அய்யனார் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின்போது பலத்த இடி ஒன்று கோயில் கோபுரத்தின் மீது விழுந்துள்ளது.
மழையின் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளனர். இந்நிலையில், அய்யனார் கோயில் பூசாரி அண்ணாதுரை இன்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய வந்த போது, கோயில் கோபுரம் இடிந்து கலசம் கீழே விழுந்திருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஊர் பிரமுகர்களிடம் கூறியுள்ளார்.