கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்தக் இக்கட்டான சூழ்நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் குறைய வாய்ப்புள்ளன.
கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, பல துறை அலுவலர்கள் கொண்ட ஒருங்கிணைந்த குழு ஒன்றை தெலங்கானா மாநில அரசு அமைத்துள்ளது.
இக்கூட்டுக் குழுக்களில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிர்வாகம், ஹைதராபாத் நகர காவல்துறையின் பணிக்குழு, பொது சுகாதார இயக்குநர் மற்றும் வெடிபொருட்களின் துணை தலைமை கட்டுப்பாட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் விற்பனை, அதன் பயன்பாடு ஆகிய இரண்டையும் கணக்கெடுத்து, அதில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்தும், மருத்துவமனை, விற்பனை செய்யும் இடம் என அனைத்து இடங்களிலும் இக்குழு ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைத்திருக்கும் வர்த்தகர்கள் அதன் உரிய அலுவலர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
குறைவான ஆக்ஸிஜன் அளவைக் கொண்ட நோயாளிகளுக்கு (சிகிச்சையில்) ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மிக முக்கியமானவை என்பதால், அவற்றின் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கும் கள்ளச்சந்தை விற்பனையாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை(ஜூலை.10) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவெடுக்கப்பட்டதாக, அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழு ஏற்கனவே தனது பணியைத் தொடங்கியுள்ளதாகவும், முறைகேடாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் விற்பனை தொடர்பாக பேரிடர் மேலாண்மை சட்டம், மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக, ஹைதராபாத் மாவட்ட காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.