வேலூர் மாவட்டம், அணைகட்டு தாலுகா அரிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரேம்நாத். இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு வேப்பங்குப்பத்தில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கொடுக்க இளநிலை பொறியாளர் ஜெய்சங்கர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாயி பிரேம்நாத் இது குறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பிரேம்நாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் ஆலோசனைபடி, இன்று(ஜூலை 13) விவசாயி பிரேம்நாத் ரசாயனம் தடவிய பணம் 5 ஆயிரத்தை இளநிலை பொறியாளர் ஜெய்சங்கரிடம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பொறியாளரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து லஞ்ச பணம் 5 ஆயிரத்தை பறிமுதல் செய்து 8 மணி விசாரணைக்கு பிறகு இளநிலை பொறியாளர் ஜெய்சங்கரை கைது செய்து, வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது!