கரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாடு கருதப்படுகிறது. அதிக முதலீடுகளைக் குவித்த முதல் 10 மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், தெலங்கானா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் வருகின்றன. தமிழ்நாடு அரசு சமீபத்தில் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது.
அடுத்தபடியாக மராட்டியம் ரூ.11 ஆயிரத்து 229 கோடி அளவுக்கு புதிய முதலீடுகளைப் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையின்படி, ஊரடங்கு நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களின் இடைக்காலத்தில் ரூ.97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக்கான 1,241 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு இதே மாதங்களில் மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளுக்கான இரண்டு ஆயிரத்து 500 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களோடு, தனியார் நிறுவனங்களின் திட்டங்களும் உள்ளன என்றும், ஊரடங்கு காலகட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நல்ல அறிகுறி என்றும் வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ரேபிட் கருவிகள் வாங்குவது தொடர்பான வழக்கில் ஐசிஎம்ஆர் பதிலளிக்க உத்தரவு!