இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் மருத்துவ பரிசோதனைகளை செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் நோயில் இருந்து தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 40 ஆயிரம் பேரை எவ்வித மருந்தும் இல்லாமல், ஊசியும் இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பாதிப்படைந்தவர்களை குணப்படுத்தியும், பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் அவர்களை தனிமைப்படுத்தியும், நோய் எப்படி வந்தது என கண்டறியும் பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் குழாய்கள் அமைப்பதற்கு ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார். இதன் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிக்களுக்காக தற்போது கூடுதலாக ரூ.76.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிதி ஒதுக்கீடு பொது சுகாதாரத் துறையால் கரோனா தடுப்பு நடவடிகக்கைகளுக்கும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தால் தமிழ்நாடு முழுவதும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும்.