சென்னையைச் சேர்ந்தவர் மாணவர் உதித் சூர்யா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து என்னை முதல் குற்றவாளியாக சேர்த்தனர். இதில் நான் உள்பட பல்வேறு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளோம். இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து தற்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி நான் பிணையில் வெளியே உள்ளேன்.
இந்த வழக்கு விசாரணையின்போது எனது 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மையான சான்றிதழ்களும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைந்து படிக்க நான் முடிவெடுத்துள்ளேன்.