தமிழ்நாடு மின் வாரியம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த நான்கு மாதங்களுக்கான மின்கட்டணத்திற்கான வசூலை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது.
கரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட இந்த வசூல் கரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருப்பது தள்ளி வைத்ததன் நோக்கத்தையே சிதைக்கிறது.
அரசு ஊரடங்கை அமல்படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த நிர்பந்தத்தின் காரணமாகவும், இது கத்தரி வெயில் காலமாக இருந்ததாலும், பெரும்பாலான வீடுகளில் 24 மணிநேரமும் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள்.
இதன் காரணமாக முதலமைச்சரே கூறியபடி நெருக்கமான வீடுகள், இடித்து பிடித்து கொண்டே இருக்க வேண்டிய நிலைமை ஆகியவற்றால் பல வீடுகளில் ஒரு முழு நாளின் பெரும்பகுதி நேரமும் மின்விசிறிகள் இயக்கப்பட்டு கொண்டே இருந்தன.
அடைந்து கிடந்த மக்கள் வேறு வழியின்றி தொலைகாட்சி பெட்டிகளுக்கு முன்பு கூடியிருப்பதும், தவிர்க்க முடியாததாகி போனது. இதுபோன்ற காரணங்களால் மக்களின் மின்சார பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதற்கு அரசின் ஊரடங்கு உத்தரவே காரணம். இந்த நிலையில், கணக்கீட்டு வரம்பை காரணம் காட்டி மின்கட்டணம் தாறுமாறாக வசூலிப்பது நியாயமற்ற அணுகுமுறை.
வேலையில்லை, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டதால்தான் அரசு ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கியது. செலவுக்கு ரூபாய் ஆயிரத்தை நிவாரணமாக கொடுத்தது. இப்படி ஒரு சூழலில் கட்ட முடியாத அளவிற்கு மின்சார கட்டணம் விதிக்கப்பட்டிருப்பது பொருத்தமற்றது, நியாயமற்றது. அரசு ஏழை, நடுத்தர மக்களின் மீது அக்கறையின்றி இருப்பதை காட்டுகிறது.
அரசின் கணக்கீட்டு முறை 500 யூனிட்டுகளுக்கு மேல் போகும்போது அடுத்த கணக்கீட்டு விகிதத்திற்கு மாறி விடுகிறது. இதன் காரணமாக இரு மடங்கிற்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று மின்சார வாரியம் நிர்ப்பந்திக்கிறது. கீழ்க்கண்ட கணக்கீடு அரசின் இந்த நடவடிக்கை எந்த அளவிற்கு சாதாரண மக்களை பாதிக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.