தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஆன்மிக அரசியலே திராவிட அரசியலுக்கு மாற்று - அர்ஜூன் சம்பத்

மதுரை: ஆன்மிக அரசியல் தான் திராவிட அரசியலுக்கும், லஞ்ச ஊழல் செய்யும் அரசுகளுக்கும் மாற்றாக அமையும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

ஆன்மீக அரசியலே திராவிட அரசியலுக்கு மாற்று - அர்ஜுன் சம்பத்
ஆன்மீக அரசியலே திராவிட அரசியலுக்கு மாற்று - அர்ஜுன் சம்பத்

By

Published : Sep 9, 2020, 9:26 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட அருண் குமார் விவகாரத்தை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மாநகர் இந்து மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, 'ராமநாதபுரம் படுகொலைச் சம்பவங்கள் போன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனை மத்திய அரசு தலையிட்டு உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் உயிரிழந்த அருண்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 25 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்' என்றார்.

மேலும் அவர், 'சேலத்தில் சிவனடியார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு வைக்கப்படும் காவல் ஆய்வாளர் மைக்கேல் மீது தமிழ்நாடு அரசு கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவருக்கு அரசு விடுமுறை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி உள்ளது. சிவனடியார் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும்.

தாய்மொழிக்கல்வியை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுத்தப்படுவதுதான் புதிய கல்விக் கொள்கை. அதை அமல்படுத்தாமல் தாமதிப்பது சரியானதல்ல. புதிய கல்விக்கொள்கையும், நவோதயா பள்ளிக்கூடங்களும் தமிழ்நாட்டிற்கு வேண்டும்.

எங்கேயும் இந்தித் திணிப்பு கிடையாது. மத்திய, மாநில அரசுகளிலும் இந்தி திணிப்பு கிடையாது. இந்தி திணிப்பு என திமுக தனது சுயலாபத்திற்காக அரசியல் விளம்பரம் செய்து வருகிறது. விமான நிலையத்தில் கனிமொழி வேண்டுமென்றே அதிகாரி மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளார் . மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகக்கூறியும் அதிகாரி மீது கனிமொழி இன்னும் புகார் கொடுக்கவில்லை.

திமுக மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தி வரும் சன்சைன் பள்ளிகளில் இந்தியை திணிக்காதே என்ற போராட்டத்தை செப். 11இல் நடத்த உள்ளோம். திமுக மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்சைன் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பும் உள்ளது. அரசுப்பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை இந்தியையும் கொண்டு வராமல் இருப்பது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம்.

தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு குறிப்பிட்ட விழுக்காட்டில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ரஜினி ஏற்கெனவே தான் கட்சி தொடங்கப் போவதாகவும் அரசியல் பிரவேசம் பற்றியும் தெளிவாக கூறிவிட்டார். ரஜினியிடமிருந்து வரும் கருத்துகளை நாங்கள் ஆதரிக்கவே செய்கிறோம். ஆன்மிக அரசியல் தான் திராவிட அரசியலுக்கும், லஞ்ச ஊழல் செய்யும் அரசுகளுக்கு மாற்று. ஆன்மிக அரசியல் என்பது கோயிலுக்குச் செல்வது மட்டுமல்ல, ஆன்மிகத்தைக் கூறுவது மட்டுமல்ல, லஞ்ச ஒழிப்பு, சாராய ஒழிப்பு இதுதான் ஆன்மிக அரசியல். ஆன்மிக அரசியல் என்றால் வளர்ச்சி அரசியல். வளமான வலிமையான தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் ஆன்மிக அரசியல்.

வருகின்ற டிசம்பர், ஜனவரியில் தேர்தல் அறிவிப்பு வந்ததும் ரஜினி பரப்புரைக்கு வந்துவிடுவார். ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைத்துக்கட்சிக் கூட்டமும் காலியாகி விடும். ஐபிஎஸ், ஐஏஎஸ் என எல்லோரும் ரஜினி பின்னால் தான் வரப்போகிறார்கள்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details