தென்மண்டலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வழக்கு நாள்குறிப்புகளை காவல் துறையினர் பிழையில்லாமல் எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இந்தச் சிறப்பு பயிற்சி முகாமை தென்மண்டல ஐ.ஜி. முருகன் இன்று தேனி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். தேனி அருகே வீரபாண்டியில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.
பின்னர் ஐ.ஜி. முருகன் பேசுகையில், "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது காவலராய் பிறப்பது அரிது. காவல் துறை மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற கிடைத்த நல்ல வாய்ப்பு. அதனை நல்ல முறையில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும்.
24 மணி நேரமும் மக்களின் சேவைக்காக கதவுகள் பூட்டப்படாமல் திறந்திருக்கும் ஒரே துறை காவல் துறை மட்டுமே. பொதுவாக காவல் துறை என்றால் கை நீளும் என்பார்கள் இதற்கு அர்த்தம்: உங்களிடம் உள்ள பேனாவின் வலிமைதான். இந்தப் பேனாவின் மூலம் நீங்கள் எழுதும் குற்ற வழக்கு நாள்குறிப்புகளைச் சிறப்பாக எழுதுவதன் மூலம் காவல் துறையினருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
யாராக இருந்தாலும், எந்த வழக்காக இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்யும் சட்டப்பிரிவான 41ஏ-வை சரியாகப் பயன்படுத்தினால், காவல் துறையினரிடையே பொதுமக்களுக்கு நல்ல புரிதல் வரும்" எனத் தெரிவித்தார்.