சென்னை அரசு பொது மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்துவைத்தார். பின், மருத்தும மையத்தை பார்வையிட்ட அவர், மூன்றாம் பாலின சமூகத்திற்கு ஆதரவு தருவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
"தமிழ்நாடு அரசு, மூன்றாம் பாலினத்தவர் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் சென்னை அரசு பொது மருத்துவமனை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு தலா ரூபாய் 15 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், சென்னையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பாலின மாற்று பன்னோக்கு உயர் சிகிச்சைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மூன்றாம் பாலினத்தவர்கள் மற்ற நோயாளிகளைப் போலவே தங்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக எல்லா நாட்களிலும் எல்லா நேரத்திலும் அரசு மருத்துவமனைகளில் எந்தவித தயக்கமுமின்றி வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேவையான பாலின மாற்று அறுவை சிகிச்சை உட்பட அனைத்து பாலின மாற்று சிகிச்சைகளும் வழங்குவதே இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தின் நோக்கம் ஆகும்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிகிச்சை முறைகள் விரைவாகவும், எவ்வித தயக்கமுமின்றி பெற்றிடவும் இந்த மையம் ஏதுவாக இருக்கும்.
இந்த மையத்தில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர், நாளமில்லா சுரப்பியல் மருத்துவர், பால்வினை நோய் இயல் மருத்துவர், மனநல மருத்துவர் உட்பட அனைத்து சிறப்பு மருத்துவக் குழு செயல்படும். இந்த சிறப்புப் பிரிவு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் வழங்கப்படும்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை 17 நபர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த சேவை தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி தரமான முறையில் தொடரப்படும்.
எனவே மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளாம். பாலின மாற்று தொடர் சிகிச்சை அளிக்க தேவையான கருவிகள் கூடுதலாக வழங்கப்பட்டு இந்த மையம் விரைவில் மேம்படுத்தப்படும்" என கூறினார்.
திருநங்கைகளுக்கான பன்னோக்கு சிகிச்சை தொடங்கிவைத்த அமைச்சர் விஜய பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலர் பீலா ராஜேஷ், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.