தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வீரப்பன் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் பதவி உயர்வுக்கு தற்காலிகத் தடை!

சென்னை: சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 62 பேர் பதவி உயர்வு கேட்டு தொடர்ந்த வழக்கில், ஜூலை 3ஆம் தேதி வரை, புதிய பதவி உயர்வு நடைமுறை மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் பதவி உயர்வுக்கு தற்காலிக தடை - சென்னை உயர்நீதிமன்றம்
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் பதவி உயர்வுக்கு தற்காலிக தடை - சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Jun 29, 2020, 9:19 PM IST

சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் 62 பேர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், 'தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நாங்கள் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறோம். வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தங்களுக்கு தமிழ்நாடு அரசு பதவி உயர்வு வழங்கியது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, தற்போதும் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறோம்.

அடுத்தகட்டமாக எங்களுக்கு ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு எங்களுக்கு பதவி வழங்காமல், கடந்த 2008ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக சேர்ந்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க பட்டியல் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் சட்ட விரோதமானது.

கடந்த 2004ஆம் ஆண்டு பதவி பெற்ற, எங்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து விட்டு, மற்றவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்குப் பின்னே வந்தவர்களுக்கு பதவி வழங்கினால், எங்களுக்குப் பாதிப்பாகிவிடும்.

எனவே, தற்போது தயாரித்துள்ள அந்தப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை, அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். எங்கள் 62 பேருக்கு பதவிகள் வழங்கிவிட்டுத்தான் மற்றவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழ்நாடு அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை புதிய பதவி உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதித்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details