சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த பாலமலை பகுதியைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில், மாவட்ட எஸ்.பி. தீபா காணீகர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு வாழும் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து போதிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் கொளத்தூர் சோதனைச் சாவடியில் பணியாற்றும் காவலர்களுக்கு, முகக்கவசம், கிருமி நாசினி மருந்து ஆகியவற்றை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து கண்ணாம்பூச்சி என்ற இடம் வரை வாகனத்தில் சென்ற எஸ்.பி. அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலைப் பகுதிகளில் ஏறி பாலமலை கிராமத்திற்கு சென்றார். அங்கு வசித்து வரும் 80 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட நிவாரண தொகுப்பை வழங்கினார்.
அப்போது மலைவாழ் மக்கள் அவரிடம் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய எஸ்பி குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைப்பதாக தெரிவித்தார். மேலும், பாலமலைப் பகுதியில் வெளியாள்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மலைவாழ் மக்களில் யாரேனும் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தால் அதனை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாலமலை பகுதிக்கு நடந்து சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வின்போது, பாலமலை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் 15 வயது மகள் ஜெயந்தி, மாவட்ட எஸ்பி தீபா காணீகரை நேரில் சந்தித்து தனது மேற்படிப்புக்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மலைவாழ் சிறுமி ஜெயந்தி படிக்க போதிய உதவி செய்வதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தனது பெற்றோருடன் இன்று(ஜூலை 23) சேலம் வந்த சிறுமி ஜெயந்தி, டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தேர்வுக்கு படிக்க புத்தகங்கள் தேவைப்படுவதாக, மாவட்ட எஸ்பி தீபாவிடம் தெரிவித்தார். இதன்பேரில் ரூ 2,000 மதிப்புள்ள போட்டி தேர்வுக்கான புத்தகங்களை மாணவி ஜெயந்திக்கு இலவசமாக வழங்கி நன்றாகப் படித்திட வேண்டும் என வாழ்த்து தெரிவித்து அனுப்பினார். மாணவியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணீகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.