தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, மைதானம் ஈரப்பதமாக இருந்த காரணத்தால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
CWC19: நியூசிலாந்து பந்துவீச்சில் நிலைத்தடுமாறிய தென்னாப்பிரிக்கா! - உலகக்கோப்பை
நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்களை எடுத்துள்ளது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டி காக், டூப்ளஸிஸ், மார்க்ரம் ஆகியோர் சொதப்பினாலும், ஹசிம் ஆம்லா, வான் டர் துசேன், டேவிட் மில்லர் ஆகியோர் அணி பொறுப்பாக ஆடினர். இதனால், தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக வான் டர் துசேன் 67, ஹசிம் ஆம்லா 55 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் லோக்கி ஃபெர்குசன் மூன்று, காலின் டி கிராண்ட்ஹோம், மிட்சல் சான்ட்னர், போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.