தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் பென்னீக்ஸ் (31). இவர் அந்த சாத்தான்குளம் பிரதான வீதியில் செல்போன் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதியன்று கடையடைப்பது தொடர்பாக காவல் துறையினருக்கு, பென்னீக்ஸுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதையடுத்து, காவல் துறையினரைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பென்னீக்ஸையும், அவரது தந்தை ஜெயராஜையும் கைதுசெய்து 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 22) மாலை நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பென்னீக்ஸைப் பணியிலிருந்த வார்டன்கள் மீட்டு கிளைச் சிறை கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கிளைச் சிறையில் வளாகத்தில் சிறைவாசி பென்னீக்ஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்திலேயே பென்னீக்ஸின் தந்தை ஜெயராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.