பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடியது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். சூரிய கிரகணம் தொடங்கும் காலம் புண்ணிய காலம் என்பதால், அந்த நேரத்தில் அண்ணாமலையாருக்கு விசேஷமான முறையில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்ற போது பொதுமக்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று, நோய்கள் நீங்கி சகல நன்மைகளும் பெற வேண்டி அண்ணாமலையாருக்கு வழிபாடு செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஞாயிற்றுக் கிழமையன்று சூரிய கிரகணம் வருவது விசேஷமான ஒன்றாகும், அதேபோல் திங்கள்கிழமையன்று சந்திரகிரகணம் வந்தாலும் விசேஷமாகும்.
இதுபோன்ற அரிய கிரகணம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் வாய்ப்பு உள்ளது. கிரகண காலத்தில் ஜெபங்கள், பாராயணங்கள், தானங்கள் எந்த அளவுக்கு கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு பலகோடி மடங்கு பெருகி நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது, ஊசி மூலம் துணி தைப்பது, கத்தியால் காய்கறி நறுக்குவது, சமையல் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது என்று கூறப்படுகிறது.
அதேபோல் முறைப்படி நாம் இந்த கிரகண காலத்தில் வழிமுறைகளை கடைப்பிடித்து வந்தால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். கிரகணம் முடிந்ததும் கண்டிப்பாக குளித்து, நீராட வேண்டும் என்று அண்ணாமலையார் திருக்கோயில் இளவரசு பட்டம் கீர்த்திவாசன் குருக்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:சென்னையில் முழு ஊரடங்கு - விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவு!