சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் என்கிற அமைப்பை பதிவு செய்து பொதுச்செயலாளராக செயலாற்றி வருகிறார். இவரை மதுவிலக்கு உதவி ஆய்வாளர் நாதமுனி என்பவர் மப்டியில் வந்து சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தேவேந்திரன் நாதமுனி, மதுவிலக்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஆகியோர் குறித்து தகாத வார்த்தைகளால் திட்டி ஆடியோ வெளியிட்டார்.
இதையடுத்து, கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை மதுவிலக்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் கைது செய்தார்.
கைது செய்ய முற்படும்போது தப்பிக்க முயற்சி செய்த தேவேந்திரன் பாலத்திலிருந்து விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனின் கை எலும்பு முறிவு தொடர்பாக காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.