ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வரும் வேனில் போதைப் பாக்கு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பண்ணாரி சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவிலிருந்து வந்த பூண்டு பாரம் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது, வேனின் முன் பகுதியில் பூண்டுக் குவியலுக்குள் போதைப் பாக்குகள், குட்கா உள்ளிட்டவற்றை ஒளித்து வைத்து கடத்தி வந்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, வாகனத்தில் இருந்த எட்டு மூட்டைகள் புகையிலைப் பெட்டி ,பான் மசாலா, 60 பெட்டிகள் கொண்டு வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் என மொத்தம் ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், திருச்சியை சேர்ந்த தமிழ் வாணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர்.
5.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் சில நாள்களாகவே பண்ணாரி சோதனைச் சாவடியில் போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியைக் கடக்கும் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.