மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்த மசோதா 2020 வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை திருப்பூர் மாவட்டத்தில் இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் இன்று (ஜூன் 26) தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையத்தில் உள்ள மின்சார உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளின் நினைவுத்தூபி முன்பு இந்த கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமையான விலையில்லா மின்சார உரிமையை காப்போம் என உறுதிமொழி கூட்டியக்கத்தினரால் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய கூட்டியக்கத்தினர், "மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த மின்சார திருத்த மசோதா திட்டத்தால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு இந்திய மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 உடனடியாக கைவிட வேண்டும். மின்சாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் சட்ட பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு முன்பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்புகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இரண்டு கோடி கையெழுத்தியக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 கட்டுப்பாடுகளை பின்பற்றி, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து இந்த கையெழுத்தியக்கத்தை நாங்கள் நடத்துவோம்" என்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய மூன்று இயக்கங்களும் இணைந்து கூட்டியக்கத்தை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகிறது.