கடந்த ஜனவரி மாதம் 12,13 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த தென்னரசு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தேர்வினை ரத்துச் செய்யக்கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவில், "தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 969 காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த 8.3.2019 வெளியானது.
அவ்வறிவிப்பில் எழுத்து தேர்வு , உடல் தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில் எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த எழுத்துத்தேர்வின் முடிவுகள் மார்ச் 16 ஆம் தேதி அன்று வெளியானது.
இதில் ஒரே தேர்வு மையத்தில் இருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
இத்தேர்வு மையத்தில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை என்றும் தேர்ச்சி பெற்றவர்களில் 144 பேர் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுள்ளனர் என்றும் தகவல் வெளியானது.
அங்கு தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு தொடர்ச்சியான வரிசையான எண்கள் வழங்கப்பட்டிருந்தன.
969 காலிப்பணியிடங்களுக்கு ஒரே பயிற்சி மையத்தில் 144 பேர் தேர்வு ஆகியுள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
முன்னதாக, டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகளில் நடந்ததை போல் எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகவே கருத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இத்தேர்விலும் முகவரியை மாற்றிக் கொடுத்து வெளிமாவட்டங்களில் தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இதற்காக நடந்த எழுத்துத் தேர்வு செல்லாது என அறிவித்து, புதிதாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சுரேஷ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் வாதாடுகையில், "கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையத்தில் சிசிடிவி கேமரா பொறுத்தவில்லை. மேலும், தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. எனவே, நடந்து முடிந்த எஸ்.ஐ தேர்வை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்" என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி மனு குறித்து உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தேர்வாணைய தலைவர், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.