உலகக்கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சவுதாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் எட்டு விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 67 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி, குல்பதீன் நைப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 225 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் குல்பதீன் நைப் (27), ரஹ்மத் ஷா (36), ஹஷ்மத்துல்லா ஷஹிடி (21), நிஜிபுல்லாஹ் சட்ரான் (21), ரஷித் கான் (14) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
பும்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய நபி ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் முகமது நபி தனி ஒருவராக நின்று, தனது போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யார்க்கர் பந்துகளுக்கு பெயர் போன பும்ராவின் ஓவரையும் இவர் சிறப்பாக எதிர்கொண்டார். இதனால், போட்டி அனல் பறக்கும் விதமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது, கடைசி ஓவரை முகமது ஷமி வீச வந்தார். இதையடுத்து, அவர் வீசிய முதல் பந்தை முகமது நபி பவுண்டரிக்கு விளாசி தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதனால், ஆட்டம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், அடுத்த பந்தை வீணடித்தார் நபி.
இதைத்தொடர்ந்து, நான்கு பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், நபி லாங் ஆன் திசையில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஆப்கானிஸ்தான் அணியிடம் இருந்த வெற்றியை இந்தியாவுக்கு திரும்பச் செய்தது. இதைத்தொடர்ந்து, அஃப்தாப் ஆலம், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோர் அடுத்தடுத்த பந்தில் போல்ட் ஆக, ஷமி இந்தத் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார்.
இதுதவிர, ஒருநாள் போட்டியில் தனது முதல் ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். மேலும், உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் 10ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதனால், இந்திய அணி இப்போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதன் மூலம், உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றார்.