தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'வாக்கு எண்ணிக்கை நாளில் அரசியல் கட்சியினருக்கு கரோனா பரிசோதனை' - சத்யபிரதா சாகு

சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ள இருக்கும் வேட்பாளர்கள், கட்சியின் அதிகாரப்பூர்வ முகவர்களுக்கு கரோனா பரிசோதனை முடிவு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Sathyapratha saku press meet in chennai
Sathyapratha saku press meet in chennai

By

Published : Apr 23, 2021, 3:01 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"வருகின்ற மே இரண்டாம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் இருப்பவர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை எடுப்பது குறித்து தொடர்ந்து சுகாதாரத்துறையுடன் ஆலோசனை செய்துவருகிறோம். வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்கு முன் தேர்தல் பணியாளர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை எடுப்பதுகுறித்து சுகாதார துறையுடம் ஆலோசித்து வருகிறோம். இது குறித்து ஓரிரு நாளில் முடிவு வெளியாகும்.

மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்றைய தினம் ஊரடங்கு ரத்து குறித்து அரசு அறிவிக்கும். வாக்கு எண்ணும் சூழ்நிலையை பொறுத்து எந்த மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை கையாள வேண்டும் என முடிவெடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இதுவரை 14 மேசைகள் வைத்து வாக்கு எண்ணும் நடைமுறை நீடிக்கிறது. மேசைகளை குறைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. சுற்றறிக்கை அனுப்பவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளன. அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். வாக்கு எண்ணும் அறை சிறியதாக இருந்தால் 7 மேசைகளும் மற்றொரு அறையில் 7 மேசைகளும் அமைக்கப்படும்.

குறைந்தபட்சம் கண்டிப்பாக 14 மேசைகள் இருக்கும். தொடர்ச்சியாக சுகாதாரத் துறை செயலருடன் தொற்றுக் காலத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் கூடுதலாக 20 விழுக்காடு பணியாளர்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details