தமிழ்நாடு

tamil nadu

சாத்தான்குளம் கொலை வழக்கு : கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

By

Published : Jul 21, 2020, 6:23 AM IST

தூத்துக்குடி : சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அலுவலர்கள் நேற்று (ஜூலை 20) விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் படுகொலை வழக்கு : பரிசோதனை செய்த கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!
சாத்தான்குளம் படுகொலை வழக்கு : பரிசோதனை செய்த கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை சிபிஐ தங்கள் காவலில் எடுத்து, மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியது. அதேபோல் காவலர் முத்துராஜை சிபிஐ அலுவலர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா, ஆய்வாளர்கள் அனுராக் சின்கா, பூரண் குமார், உதவி ஆய்வாளர்கள் சுசில்குமார் வர்மா, சச்சின், சிபிஐ காவலர்கள் அஜய்குமார், சைலேந்திர குமார், பவன்குமார், திரிபாதி ஆகிய அலுவலர்கள் ஜூலை 18 அன்று இரவு 7 மணி முதல் 8.20 மணி வரை விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 20) மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த சிபிஐ அலுவலர் குழுவானது, உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன், செவிலியர்கள் கண்ணகி, மகேஸ்வரி மீனாட்சி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மருத்துவ குறிப்பு ஆவணங்களையும் பார்வையிட்டு நகல் எடுத்துக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details