தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை அனைத்துமே வெற்றியடைவதில்லை. ரசிகர்கள் படத்தின் கதை, நடிகர், நடிகைகளின் நடிப்பு ஆகியவற்றை தராசுக்கோலில் அளந்துதான் படத்திற்கு மதிப்பளிக்கிறார்கள். அந்த வகையில், 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார் நடித்து, இயக்கி, தயாரித்த இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகின்றன.
சத்தமே இல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது இத்திரைப்படம். இதில் நடித்திருந்த ஸ்வாதி, ஜெய், கஞ்சா கருப்பு, மைக்செட் ஜித்தன் ஆகியோர் தங்களது நடிப்புத் திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு அது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.