சென்னை ராயபுரம் ஆடுதொட்டி, ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (55). இவர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர், நேற்று (ஏப்.21) கொருக்குபேட்டை ஏகப்பன் தெருவில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
சேகரித்த குப்பையை மின்ட் கண்ணன் ரவுண்டானாவிலுள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்குக் கொண்டு வந்தார். அப்போது ஒரு பிளாஸ்டிக் கவரில் பத்து சவரன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மோகனசுந்தரம் குப்பையில் கண்டெடுத்த 10 சவரன் நகையை, கொருக்குப்பேட்டை ஆய்வாளர் தவமணியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, காவல் துறையினர் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார்களை ஆய்வு செய்தனர்.
தூய்மைப் பணியாளர் ஒப்படைத்த நகைகள் அப்போது கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தேவி என்பவர் தன் நகைகள் காணாமல் போனதாக புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தேவியை அழைத்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நேற்று(ஏப்.21) காலை வடபழனி முருகன் கோயிலுக்கு திருமணத்திற்காக அவரது தாய் முனியம்மாள் உடன் ஆட்டோவில் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது போகும் வழியில் ஏகப்பன் தெரு குப்பைத் தொட்டியில் குப்பைப்பையுடன் நகைபெட்டி வைத்திருந்த பையையும் தவறுதலாகப் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் தவமணி, தேவி தவறவிட்ட 10 சவரன் நகைகளை அவரிடம் ஒப்படைத்தார். மேலும், குப்பையில் கிடந்த நகைகளை எடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மோகன சுந்தரத்திற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.