உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறப்பாக ஆடிய தவான் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதையடுத்து, அவரது இடது கையின் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, மூன்று வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவிறுத்தியுள்ளனர்.
தவான் காயம், ரிஷப் பண்ட்டிற்கு அலர்ட் தந்த பிசிசிஐ!
இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தற்காலிக மாற்று வீரராக ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதனால், அவர் அடுத்து வரும் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்தது. இது தொடர்பாக பிசிசிஐ கூறியதாவது, "ஷிகர் தவானுக்கு ஏற்பட்டதால், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். இதனால், அவருக்கு மாற்று வீரராக தற்போதைக்கு இளம் வீரர் ரிஷப் பண்ட்டை இங்கிலாந்து அனுப்ப முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்துள்ளது.
ஆனால், இவர்தான் ஷிகர் தவானுக்கு மாற்று வீரர் என பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. இதனால், நான்காவது வரிசையில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் இவர்களில் யாரேனும் ஒருவர் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.