12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியன் பராக் 50 ரன்கள் அடித்தார். டெல்லி அணி சார்பில் இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 116 ரன் இலக்குடன் ஆடிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக, ரிஷப் பந்த் 38 பந்துகளில், இரண்டு பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள் என 53 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்தத் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மறுமுனையில், ராஜஸ்தான் அணி 14 போட்டிகளில் 5 வெற்றி, 8 தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லை என 11 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.