இது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் வனக்கோட்டம் 69 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. அதில் மொத்தம் 7 வனச் சரகங்கள் உள்ளது. அதில் மேட்டுப்பாளையம் வனச்சரகமும் ஒன்று. அங்கு கடந்த 10 நாள்களில் 12 யானைகள் இறந்ததாக சிலர் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவுகளிலும் வெளியிட்டு வருகிறார்கள்.
இவ்வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் (180 நாட்களில்) 14 யானைகள் இறந்துள்ளன. அதில் 13 யானைகள் இயற்கையான நோய் மற்றும் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதல் போன்ற காரணங்களால் தான் இறந்துள்ளன. இவ்வாறு இறந்த யானைகளை மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட வன அலுவலர், வனப்பணியாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவர் மற்றும் அரசு கால்நடை மருத்துவர்களால் உடற்கூறாய்வு செய்யப்பட்டு இறந்ததற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காட்டில் 25.2.2020 அன்று கண்டறியப்பட்ட இறந்த பெண் யானையினை அன்றே உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் ஜீரணப்பாதைக் கோளாறு காரணமாக இறந்ததாக அறியப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிறுமுகை, போளுவாம்பட்டி மற்றும் காரமடை வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் முறையே 6.4.2020, 15.4.2020, 16.4.2020 மற்றும் 18.4.2020 ஆகிய நாள்களில் இறந்த 3 ஆண் யானைகள் மற்றும் ஒரு பெண் யானையை அன்றைய நாள்களிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் முறையே இயற்கை உபாதை, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வெப்ப அழற்சி, மூளை ரத்தக்கசிவு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு கோளாறு காரணமாக இறந்ததாக அறியப்பட்டது.
2020ஆம் ஆண்டு மே மாதத்தில், சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் 10.5.2020 மற்றும் 14.5.2020 ஆகிய தினங்களில் இறந்த 2 பெண் யானைகளை அன்றைய தினங்களிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் முறையே கர்ப்பப்பையில் உள்ள கருவளர்ச்சி கோளாறு மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இறந்ததாக அறியப்பட்டது.