தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வாடகை வாகன உரிமையாளர்கள் நிதியுதவிகோரி மனு - அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - filed a petition

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக வாடகை வாகன உரிமையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Renton vehicle owners petition
Renton vehicle owners petition

By

Published : Jun 25, 2020, 4:27 PM IST

தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஜூட் மேத்யூ மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியதாவது; 'கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாடகை கார்கள் இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் வாடகை கார்களின் உரிமையாளர்களே ஓட்டுநர்களாக உள்ளனர். அவர்கள் தினசரி வருமானத்தை நம்பியே உள்ளனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண நேரங்களில் சாலை வரிகள் உள்ளிட்டத் தேவையான அனுமதிகளுக்கு உரிய கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு நிதியுதவியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், தகுதிச் சான்றை புதுப்பிக்க ஆறு மாத காலம் அவகாசம் வழங்கவேண்டும்.

அதுசமயம் வாகனக் காப்பீடும்; ஆறு மாதங்களுக்கு அவகாசமும் வழங்கவேண்டும், போக்குவரத்து வாகனங்களுக்குப் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் வரையிலான வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும்; சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான வரியில் இருந்து விலக்களிக்கவேண்டும்.

மேலும் சமூக நல வாரியத்தின் மூலம் முடி திருத்துவோர், நெசவாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி தங்களுக்கு வழங்கப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட வாடகை வாகன உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என, இந்த வழக்கில் மனுதாரர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, மனு குறித்த கருத்துகளைத் தெரிவிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details