திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்தவர் சங்கரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த மாதம் தன்னை பாலவேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவர் காதலித்து ஏமாற்றியதாக கூறி அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து கனகம்மாசத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணி கமலா தியேட்டர் அருகே திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், தீக்குளித்து இறந்துபோன இளம்பெண்ணின் உறவினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உதவி ஆய்வாளர் சுதாகர், டிஎஸ்பி ஆகியோரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்பொழுது மணிமேகலை காதலித்து ஏமாற்றிய ராஜ்குமார், அவரது குடும்பத்தினர் மீது காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியாமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும், உடனடியாக அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் கமலா திரையரங்கம் தொடங்கி டிஎஸ்பி அலுவலகம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட டிஎஸ்பி சேகர், குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிறகு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.