தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

விழுப்புரத்தில் தயாராகும் உலகக்கோப்பை... கைப்பற்றுவார்களா இந்திய வீரர்கள்? - Kohli

விழுப்புரம்: இந்திய அணி வீரர்கள் உலகக் கோப்பையை வென்றால், தனது சார்பில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு மாதிரி உலகக்கோப்பையை பரிசளிப்பதாக நகை தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்களுக்கு விழுப்புரத்தில் தயாராகும் உலகக் கோப்பை!

By

Published : Jun 15, 2019, 9:09 PM IST

12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இதையடுத்து, நடைபெறும் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக் கோப்பையுடன், ரூ. 28 கோடி பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில், வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக் கோப்பை போன்ற மாதிரி கோப்பையை விழுப்புரத்தைச் சேர்ந்த நகை தொழிலாளி ஒருவர் தயார் செய்துள்ளார்.

விராட்டிகுப்பத்தில் வசித்து வரும் நகை தொழிலாளியான ரமேஷ் என்பவர், 0.020 மில்லிகிராம் தங்கத்தாலான உலககோப்பையை வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த குட்டி உலகக் கோப்பையை வடிவமைக்க 60 ரூபாய்தான் செலவாகியது என்கிறார் ரமேஷ். இந்த உலகக் கோப்பையின் உயரம், ஒரு அரிசியின் உயரத்தில் பாதிதான் உள்ளது.

இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய ரமேஷிடம் வைக்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்...

இந்திய அணி வீரர்களுக்கு விழுப்புரத்தில் தயாராகும் உலகக் கோப்பை!

கிரிக்கெட் மீது அவ்வளவு ஆர்வமா?

'எனக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனால் கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்ப்பேன். தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. நான் 0.020 மில்லி கிராம் தங்கத்தால் ஆன உலக கோப்பையை வடிவமைத்துள்ளேன்.

இதை தயார் செய்ய எவ்வளவு நேரம் ஆனது?

நான்கு மணி நேரம் கடுமையாக உழைத்து இதனை தயார் செய்துள்ளேன். இதற்கான செலவு 60 ரூபாய்தான்.

அரிசியில் பாதி அளவில் இருக்கும் உலகக் கோப்பை

உங்கள் ஆசை என்ன?

கோலி தலைமையிலான இந்திய அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெற்று, உலகக் கோப்பை தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் என் ஆசை.

அப்படி இந்திய அணி வெற்றிபெற்றால் நீங்கள் என்ன செய்வீங்க?

அப்படி இந்திய அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில், அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நான் தயார் செய்த உலகக் கோப்பையை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன்' என்றார்.

2015, 2019 இல் தயாரிக்கப்பட்ட உலகக் கோப்பை

இது போன்று உலகக் கோப்பையை அவர் வடிவமைத்து புதிது ஓன்றும் இல்லை. இதற்கு முன்னதாக 2015இல் உலகக் கோப்பை தொடரானாது ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்றது. அப்போது, அவர் 0.040 மில்லிகிராம் தங்கத்தால் உலகக் கோப்பையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

ரமேஷின் ஆசையை போலவே, இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசைதான் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இந்திய அணி என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details