தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை! - PWD recommends to the Government to open water from Vaigai Dam

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியதால் முதல் போக பாசனத்திற்காக ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.

Vaigai Dam
Vaigai Dam

By

Published : Aug 19, 2020, 2:45 AM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளவு உடைய இந்த அணையின் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன வசதி அடைகிறது.

மேகமலை வனப்பகுதியில் உள்ள மூல வைகை ஆறு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரே அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூல வைகை மற்றும் கேரளாவில் பெய்த கனமழையினால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஆகஸ்ட் 18) காலை வைகை அணையின் நீர்மட்டம் 50.16 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 2014மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து 1,482கன அடியாக இருக்கின்றது. பொதுவாக வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போகத்திற்கும் அக்டோபர் மாதத்தில் இரண்டாம் போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கோடை மழை பொய்த்து அணையின் நீர்மட்டம் உயராததால் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது கால தாமதமானது. தற்போது அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ளதால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதனடிப்படையில், வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறித்து ஓரிரு நாள்களில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக வருகிற 28ஆம் தேதி முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க அதிகமான வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதன்படி, முதல் போகத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் அணையின் நீர் இருப்பை பொறுத்து 120நாள்களுக்கு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரின் மூலம் பேரணை முதல் கள்ளந்திரி வரையிலுள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details