புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் 93.26 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், உமாமகேஸ்வரி கூறுகையில், "தமிழ்நாட்டில் மார்ச் 2020ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 172 பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதிய 18,229 மாணவ, மாணவியர்களில் (மாணவர்கள் 7,949, மாணவியர்கள் 10,280) 17,000 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 7,187 மாணவர்களும் 9,813 மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 93.26 விழுக்காடு ஆகும். சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.01 விழுக்காடு ஆகும்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ச்சி 3.25 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் மாநில அளவில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு தேர்ச்சியில் 22ஆவது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் 16ஆவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 42 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 8 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். இத்தேர்ச்சிக்கு சிறப்பாக உழைத்திட்ட அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகள்" என்றார்.