ஊரடங்கு உத்தரவு காலத்தில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெண்கள், பொதுமக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், குடிக்கு அடிமையானவர்கள் திருந்தி வாழ வாய்ப்பாக இருந்து. கொலை, கொள்ளைச் சம்பவங்களும் குறைந்தன. விபத்துக்கள் ஏதும் நடக்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளதை, எதிர்த்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மதுக்கடைகளை திறக்கலாம் என அறிவித்ததும், குடியை விட்டவர்கள் நாளை மதுக் கடைகளுக்கு சென்று மது வாங்க ஆயத்தமாகி வருவது, கவலையளிக்கிறது. பெண்களின் வாழ்க்கையை சீரழிக்க அரசே துணை போகிறது என புதுகை மாவட்ட மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து புதுகை மக்கள் கூறியதாவது, "டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், குற்றச் சம்பவங்கள் கனிசமாகக் குறைந்தது. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது, அனைத்துப் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் மன நிம்மதியை கொடுத்தது. வாழ்வாதாரமின்றி தவிப்பவர்களுக்கு கூட தன் கணவர் பிள்ளைகள் குடியை விட்டு விட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறந்து, ஆண்களை மேலும் குடிக்கு அடிமைப்படுத்துவது சரியல்ல" என்று ஒரு பெண் கூறினார்.