புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் உமாமகேஸ்வரி, ”தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
புதுக்கோட்டையில் இதுவரை 52 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையின் பலனாக தற்பொழுது 27 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 25 நபர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 10 சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இம்மையங்கள் வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் புதுக்கோட்டை மாவட்ட எல்லையை அடைந்தவுடன் பள்ளிகள், விடுதிகள், தனியார் இடங்களில் போதுமான வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு, தங்க வைக்கப்படுகின்றனர்.
இதேபோன்று மாவட்டத்தில் 16 இடங்களில் 118 நபர்கள் தங்கவைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இவ்வாறு தங்கியுள்ள நபர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாகச் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன.
இதில் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற முடிவு வரும் நபர்கள் அவர்களது வீட்டிற்கு அனுப்பப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் 629 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர். கரோனா பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்படும் நபர்கள் உடனடியாக ராணியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்களுக்குச் சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே கடந்த மூன்றறை மாதங்களாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.
தற்பொழுது பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால், பேருந்து நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் வெளியில்வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டு வெளியே வர தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. இதனைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கச் செய்து, புதிய முகக்கவசம் வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.