தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குள்பட்டது மேக்கிழார்பட்டி, ஆவாரம்பட்டி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை ஆகிய கிராமங்கள். இங்குள்ள பட்டியலின மக்கள் இலவச வீடுகள் கட்டித்தர கேட்டு அரசுக்கு மனு அனுப்பினர்.
அதன்படி 225 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிதாக கட்டித்தர உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மறுத்து தங்களுக்கு தொகுப்பு வீடுகளாக கட்டித்தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்திவந்தனர்.
இந்நிலையில் இன்று பட்டியலின மக்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாய், போர்வைகளுடன் குடியேற முயன்றவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
பின்னர் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நின்று அரசுக்கு எதிராக பட்டியலின மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தீண்டாமையை கடைப்பிடித்துவருவதாகப் புகார் தெரிவித்தும், அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.