தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வேடந்தாங்கல் நீர் நிலைகளில் மாசு: அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு - தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம்

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகே இயங்கிவரும் தனியார் மருந்து நிறுவனத்தால், வேடந்தாங்கல் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் நிலைகளில் மாசு ஏற்படுகின்றனவா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேடந்தாங்கல் நீர் நிலைகளில் மாசு: அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
வேடந்தாங்கல் நீர் நிலைகளில் மாசு: அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By

Published : Jun 29, 2020, 5:47 PM IST

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயதின் பரப்பளவு, சன் ஃபார்மா என்ற தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்காக குறைக்கப்படுவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், செல்வராஜ் என்பவர், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,

“சன் ஃபார்மா என்னும் நிறுவனம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயதின் மைய பகுதிக்கு(Core zone) மிக அருகில் இயங்கிறது. இந்த நிறுவனம் இயங்குவதற்கு சட்டப்படியான சுற்றுச்சூழல் துறை தடையில்லா சான்று, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி சான்று உள்ளிட்ட எந்த அனுமதியும் பெறவில்லை.

இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி, அதன் அருகில் இருக்க கூடிய நீர்நிலைகள், விவசாய நிலங்களில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதனால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தி வேடந்தாங்கல் சரணாலயத்தை பாதுகாக்க நிரந்தரமாக குழு அமைக்க வேண்டும்”. என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் வல்லுநர் குழு உறுப்பினர் சாய்ப்பால் தாஸ் குப்தா அமர்வு,

சன் ஃபார்மா நிறுவனம் முறையான சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று இயங்குகின்றதா?

நிறுவனத்தில் இருந்து வெளியாகும் மாசுவை கட்டுப்படுத்த போதுமான வசதிகள் உள்ளனவா?

சட்டத்துக்கு புறம்பாக கழிவு நீர் விவசாய நிலங்களிலும், நீர்நிலைகளிலும் வெளியேற்ற படுகிறதா?

அப்படியெனில், இதனால் நீர் மற்றும் மண்ணின் தரம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது? ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மறுசீரமைப்பு செய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கை மற்றும் விதி மீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் இழப்பீடு உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யவும் குழு அமைத்து உத்தரவிட்டனர்.

இந்த குழுவில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறையின் மூத்த மண்டல அலுவலர், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த மண்டல அலுவலர், வன உயிர் அலுவலர், தமிழ்நாடு வன உயிரியல் மற்றும் சரணாலயம் துறை அலுவலர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அறிவியலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details