தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா சிகிச்சைக்கான செலவை ஏற்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பது குறித்து பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Private hospital fare regulation, HC issued direction
Private hospital fare regulation, HC issued direction

By

Published : Jun 9, 2020, 9:51 PM IST

கரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும், கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி, பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் ஆகும் சிகிச்சைக்கான செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசே ஏற்க வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவறானது” என்று வாதிட்டார்.

இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அதிகக் கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பன குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், கரோனா தொற்று சிகிச்சைக்கு மாநிலங்களுக்கு என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details