மதுரை: புதுக்கோட்டையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக் கோரிய வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் தனது காணாமல் போன தனது 17 வயது மகனை கண்டுபிடித்து தரக் கோரி உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "வழக்குரைஞராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது 17 வயது மகன் சண்முகபிரியன் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறான்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருசக்கரத்தில் பள்ளிக்குச் சென்றவன் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் தேடியும் எவ்வித பயனும் இல்லை. இதையடுத்து, நான் கொடுத்த புகாரின் பேரில், புதுக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனது மகனை கோவையில் சிலர் பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று என் மகனின் போட்டோவை காண்பித்து விசாரித்தோம். அங்குள்ள சில உணவகங்களில் என் மகன் வேலை கேட்டதாகவும், அவர்கள் வேலை தரவில்லை என்பதும் தெரிந்தது. அங்கு பல இடங்களில் தேடியும், எனது மகனை கண்டுபிடிக்க இயலவில்லை.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு, எனது மகனை மீட்டுத்தர காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், தற்போது வரை சிபிசிஐடி காவல்துறையினர் 34 நபர்களிடம் விசாரணை செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது எனக் கூறினார். இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.