ஐபிஎல் கிரிக்கெட்டின் இந்தியா - பாகிஸ்தான் என கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில்,டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா, டி காக் ஆகியோர் சென்னை அணியின் பந்துவீச்சை முதல் நான்கு ஓவர்களில் துவம்சம் செய்தனர்.
இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 45 ரன்களை சேர்த்த நிலையில், டி காக் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் ஷர்மாவும் 15 ரன்களுக்கு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 15, குருணல் பாண்டியா 7, இஷான் கிஷன் 23, ஹர்திக் பாண்டியா 16, ராகுல் சாஹர் 0, மெக்லனகன் 0 ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபக்கம் தன் பிறந்தநாள் அதுவும் பொல்லார்ட் களத்தில் தனிஒருவராக போராடினார். 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 41 ரன்களுடன் அவர் இறுதிவரை ஆட்டமிழக்கமால்களத்தில் இருந்தார். இதனால், மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் மூன்று, ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.