இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப்போல 'உங்க ஊரில் கரோனாவெல்லம் எப்படி போகுது?' என்ற கிண்டலும், கேலியுமாக அரசியல் பிழைப்பு நடத்தும் வேடதாரி அல்ல நாங்கள். செல்வத்தையும், செல்வாக்கையும் பகட்டாக காட்டிக் கொள்ளும் தங்கள் சொந்த கட்சிக்காரர்களுக்கு நிவாரண பொருள்கள் என்ற பெயரில் பொட்டலங்களை வழங்குவதையும், அதை புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடுவதையும் பொழுதுபோக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்வதுபோல் எங்கள் மக்கள் பணி. மக்களோடு மக்களாய் தோள் நின்று உழைப்பவர்கள் நாங்கள் என்பதை தமிழ்நாட்டின மக்கள் நன்கு அறிவார்கள்.
இரவு பகல் பாராது உயிரை பணயம் வைத்து மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், காவல் துறையினரையும், தன்னார்வத் தொண்டர்களையும் கொச்சைப்படுத்திவருவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும். இல்லையெனில் மக்களின் இன்றைய கேலியும், கிண்டலும் நாளை அவருக்கு எதிராக பெரும் கோபமாய் உருமாறும். அதைத் தாங்கும் சக்தி அவருக்கு கிடையாது என்பதையும் அவர் உணர வேண்டும்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில், "என் மீது கேஸ் போடுங்கள் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்" என அலப்பறை செய்வார். அதைப்போல கோவை மாவட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களது பதவியை தக்க வைக்கவும், திமுகவின் தலைவரை திருப்திப்படுத்தவும் சட்ட விதிகளை மதிக்காமல் அராஜக செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றனர்.